Thursday, 7 August 2014

எது சரியான ஞானஸ்நானம்?




ஞானஸ்நானம் என்பது என்ன?

கிறிஸ்தவர்கள் கைக்கொள்ளும்படி கர்த்தராகிய இயேசு கிறிஸ்து கட்டளையிட்ட உபதேசங்கள் அநேகம் உண்டு. ‘செய்யாதே’ என்று தேவன் கட்டளையிட்டதைச் செய்வது பாவமாகும். அதுபோலவே செய்யுங்கள் என்று தேவன் கட்டளையிட்டதை செய்யாமல் விடுவதும் பாவமே. செய்யும்படி தேவன் கட்டளையிட்ட பிரமாணங்களில் ஒன்று தான் ஞானஸ்நானம்.
ஜலத்தினாலும் ஆவியினாலும் பிறவாவிட்டால் தேவனுடைய இராஜ்யத்தில் பிரவேசிக்க முடியாது’ என்று வேதம் திட்டவட்டமாக கூறுகிறது. ஜலத்தினால் பிறப்பது என்பது ஞானஸ்நானம் பெறுவதைக் குறிக்கிறது. எனவே ஞானஸ்நானம் பெறாமல் யாரும் பரலோகம் செல்ல முடியாது.
ஞானஸ்நானமானது நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் முதலாம் வருகைக்கு முன்னோடியாக வந்த யோவான் ஸ்நானகன் முதற்கொண்டு இருந்து வருகிறது.

எப்படி ஞானஸ்நானம் கொடுப்பது?

தெளித்தல் முறையில் ஞானஸ்நானம் கொடுப்பது தவறாகும். யோவான் 3 : 23-ல் வேதம் இவ்வாறு கூறுகிறது:

‘சாலிம் ஊருக்குச் சமீபமான அயினோன் என்னும் இடத்திலே தண்ணீர் மிகுதியாயிருந்தபடியினால், யோவானும் அங்கே ஞானஸ்நானங்கொடுத்து வநதான்; ஜனங்கள் அவனிடத்தில் வந்து ஞானஸ்நானம் பெற்றார்கள்.’

இங்கு ‘தண்ணீர் மிகுதியாயிருந்தபடியினால்’ என்று குறிப்பிடப்பட்டிருப்பதை கவனியுங்கள். தெளிப்பு ஞானஸ்நானத்தை யோவான் கொடுத்திருந்தால் அவனுக்கு மிகுதியான தண்ணீர் அவசியமில்லை. எனவே இங்கு கூறப்பட்டிருக்கும் ஞானஸ்நானம் தண்ணீருக்குள் மூழ்கி எடுக்கப்படும் கிறிஸ்தவ ஞானஸ்நானமே அன்றி வேறல்ல. எனவே தண்ணீருக்கு மூழ்கி ஞானஸ்நானம் எடுப்பதே சரியானதாகும்.

நாம் தண்ணீருக்குள் மூழ்கும்போது இயேசு கிறிஸ்துவோடே கூட அடக்கம் பண்ணப்படுகிறோம். (கொலோ 2 : 12) தண்ணீரை விட்டு வெளிவருவது எதைக் குறிக்கிறது? நாம் இயேசு கிறிஸ்துவோடே கூட உயிரோடு எழுந்து விட்டோம் என்பதைக் குறிக்கிறது.

மேலும் அப் 8 : 38-ல் ‘... அப்பொழுது பிலிப்பும் மந்திரியும் ஆகிய இருவரும் தண்ணீரில் இறங்கினார்கள்; பிலிப்பு அவனுக்கு ஞானஸ்நானம் கொடுத்தான்’ என்று தேவனுடைய வார்த்தை உரைக்கிறது. தெளிப்பு ஞானஸ்நானத்தைப் பிலிப்பு கொடுத்திருந்தால் அவனும் மந்திரியும் தண்ணீரில் இறங்க வேண்டிய அவசியமில்லை. கரையிலேயே நின்று ஞானஸ்நானம் கொடுத்திருக்கலாம்.

தலையில் கொஞ்சம் தண்ணீரைத் தெளிப்பதோ அல்லது தலையில் தண்ணீரை ஊற்றுவதோ ஞானஸ்நானம் ஆகாது. ஞானஸ்நானம் பெறும்படி இயேசு ‘தண்ணீருக்குள் இறங்கினார்’ என்றும், ‘ஜலத்திலிருந்து கரையேறினார்’ என்றும் வேதத்தில் வாசிக்கிறோம் (மத் 3 : 16, அப் 8 : 38)

குழந்தைகளுக்கு ஞானஸ்நானம் கொடுப்பது சரியானதா?

குழந்தைகளுக்கு ஞானஸ்நானம் கொடுக்கும் வழக்கம் பிரபலமாகுமுன்னே, விசுவாசிக்கிறவர்களுக்கு மட்டும் தான் ஞானஸ்நானம் கொடுத்து வந்தனர். குழந்தைகளுக்கு ஞானஸ்நானம் கொடுப்பது தவறாகும். முழுவேதாகமத்திலும் எங்கும் குழந்தைகளுக்கு ஞானஸ்நானம் கொடுத்ததாக எழுதப்படவே இல்லை.
மாற்கு 1:5-ல் ‘அப்பொழுது யூதேயா தேசத்தார் அனைவரும் எருசலேம் நகரத்தார் யாவரும், அவனிடத்திற்குப் போய், தங்கள் பாவங்களை அறிக்கையிட்டு, யோர்தான் நதியில் அவனால் ஞானஸ்நானம் பெற்றார்கள்.’
இங்கு ஜனங்கள் தங்கள் பாவங்களை அறிக்கையிட்டு யோவானால் ஞானஸ்நானம் பெற்றார்கள் என்று எழுதப்பட்டுள்ளது. சிறு குழந்தைகளுக்கு பாவம் என்றால் என்னவென்று தெரியாத போது எப்படி அவைகளுக்கு ஞானஸ்நானம் கொடுப்பது? எனவே குழந்தை ஞானஸ்நானம் தவறாகும்.

எந்த நாமத்தினால் ஞானஸ்நானம் கொடுப்பது?

இன்று ஏறக்குறைய எல்லா சபைகளுமே பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்தில் ஞானஸ்நானம் கொடுக்கின்றனர். அவர்கள் அவ்வாறு ஞானஸ்நானம் கொடுப்பது தவறாகும். அப்படிப்பட்ட ஒரு கட்டளை வேதத்தில் எங்குமே இல்லை. அவர்கள் மத் 28:19-ல் எழுதப்பட்டுள்ள பின்வரும் வசனத்தை எடுத்துக் கொள்கின்றனர்.

‘ஆகையால், நீங்கள் புறப்பட்டுப் போய், சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுத்து,’

(இங்கு ‘நாமம்’ என்பது பெயரைக் குறிக்கிறது.)

பிதா என்பது ஒரு பெயரல்ல, குமாரன் என்பது ஒரு பெயரல்ல. பரிசுத்த ஆவி என்பது ஒரு பெயரல்ல. இந்த வசனததில் ‘பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்தில்’ (பெயரில்) என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமம் என்பது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவே. எனவே பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்தில் ஞானஸ்நானம் கொடுப்பது தவறாகும். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஞானஸ்நானம் கொடுப்பதே சரியானதாகும். காரணம் வேதத்தில் யாருமே பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்தில் ஞானஸ்நானம் எடுத்ததாக எழுதப்படவேயில்லை. 

வேதத்தில் யாராவது பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்தில் ஞானஸ்நானம் பெற்றதாக கூறப்பட்டிருக்கும் ஒரு வசனத்தை நீங்கள் கண்டால் எனக்கு எழுதுங்கள். அப்படியானால் உங்களுக்கு 1 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்று உறுதியளிக்கிறேன்.

வேதத்தில் அப் 2:38-ல் ‘பேதுரு அவர்களை நோக்கி : நீங்கள் மனந்திரும்பி, ஒவ்வொருவரும் பாவமன்னிப்புக்கென்று இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ளுங்கள், அப்பொழுது பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெறுவீர்கள்’ என்று எழுதப்பட்டுள்ளது.

வேதாகம காலங்கள் அனைத்திலும் தேவனுடைய பிள்ளைகள் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் மாத்திரமே ஞானஸ்நானம் கொடுத்து வந்தனர். ஏனெனில் அதுவே சத்தியமாகும்.
நாம் ஏன் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஞானஸ்நானம் பெற வேண்டும் என்று நீங்கள் கேட்கலாம். அதற்கான விடையை அடுத்து வரும் 5 பகுதிகளில் நீங்கள் காணலாம். ஜெபத்தோடு வாசியுங்கள். ஆவியானவர் தாமே உங்களுக்கு அதை வெளிப்படுத்துவாராக.

சாட்சி : 1

பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்தில் யாரும் ஞானஸ்நானம் பெற்றதாக வேதத்தில் எங்கும் எழுதப்படவேயில்லை. வேதத்தில் பின்வரும் வேதவசனங்களில் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஞானஸ்நானம் கொடுப்பதைக் குறித்து எழுதப்பட்டுள்ளது:

‘அதைக் கேட்டபோது அவர்கள் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றார்கள்.’ (அப் 19 : 5)

‘பேதுரு அவர்களை நோக்கி : நீங்கள் மனந்திரும்பி, ஒவ்வொருவரும் பாவமன்னிப்புக்கென்று இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ளுங்கள், அப்பொழுது பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெறுவீர்கள்.’ (அப் 2 : 38)

‘இவர்கள் வந்த பொழுது அவர்களில் ஒருவனும் பரிசுத்த ஆவியைப் பெறாமல் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே ஞானஸ்நானத்தை மாத்திரம் பெற்றிருந்தவர்களாகக் கண்டு, அவர்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொள்ளும்படி அவர்களுக்காக ஜெபம்பண்ணி,
அவர்கள் மேல் கைகளை வைத்தார்கள், அப்பொழுது அவர்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றார்கள்’ (அப் 8 : 15, 16, 17)

கர்த்தருடைய நாமத்தினாலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுக்கும்படி கட்டளையிட்டான். அப்போழுது சில நாள் அங்கே தங்கும்படி அவனை வேண்டிக் கொண்டார்கள் (அப் 10 : 48)

வேதத்தில் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் ஞானஸ்நானம் கொடுப்பதைக் குறித்து தேவன் இத்தனை வசனங்களில் எழுதி வைத்திருக்கும் போது, நீங்கள் வேறொரு நாமத்தில் ஞானஸ்நானம் பெற்றிருந்தால் தேவன் எவ்வாறு அதை அங்கீகரிப்பார். நாம் தேவனுடைய வார்த்தைக்குத் திரும்புவோம். நீங்கள் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஞானஸ்நானம் பெறாதவராய் இருந்தால் உடனடியாக அந்த ஞானஸ்நானம் பெற தாழ்மையுடன் வேண்டுகிறோம்.

சாட்சி : 2

அப் 19 : 5-ல் பவுலுடைய பிரசங்கத்தைக் கேட்ட விசுவாசிகள், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக் கொண்டதாக எழுதப்பட்டுள்ளது. எனவே பவுல் மூலமாக ஆவியானவர் பிரசங்கித்த இந்த ஞானஸ்நானத்தை நாம் மாற்றக்கூடாது. பவுல் பிரசங்கித்த இந்த சுவிவேஷத்திற்கு விரோதமாய் யார் பிரசங்கித்தாலும் அவன் சபிக்கப்பட்டவன் என்ற வேதம் கூறுகிறது. கலாத்தியர் 1 : 8, 9 ஆகிய வசனங்களை வாசித்து அது உண்மை தானா என்று பாருங்கள்.

‘நாங்கள் உங்களுக்குப் பிரசங்கித்த சுவிசேஷத்தையல்லாமல், நாங்களாவது, வானத்திலிருந்து வருகிற ஒரு தூதனாவது, வேறொரு சுவிசேஷத்தை உங்களுக்குப் பிரசங்கித்தால், அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன்.’
முன் சொன்னதுபோல மறுபடியும் சொல்லுகிறேன்; நீங்கள் ஏற்றுக்கொண்ட சுவிசேஷத்தையல்லாமல் வேறொரு சுவிசேஷத்தை ஒருவன் உங்களுக்குப் பிரசங்கித்தால் அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன்.’

சாட்சி : 3

பிதா ஒரு நாமமல்ல, குமாரன் ஒரு நாமமல்ல, பரிசுத்த ஆவி ஒரு நாமமல்ல, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவே.

இதைத்தான் அப்போஸ்தலர்களும் காலங்கள் தோறும் இருந்தவர்களும் அறிந்து பின்பற்றினர்.

இப்பொழுது ஒரு உதாரணத்தை எடுத்துக் கொள்வோம். உங்கள் பெயர் டேவிட். நீங்கள் ஒரு பிதாவாக இருக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். நீங்கள் ஒரு நாள் வங்கிக்கு சென்று, உங்கள் கணக்கிலிருந்து ரூ. 1000/- எடுக்க வேண்டுமென்று வைத்துக்கொள்வோம். உங்கள் கையொப்பம் இட வேண்டிய இடத்தில் பிதா என்று நீங்கள் எழுதினால், நிச்சயமாக நீங்கள் பணத்தைப் பெற்றுக் கொள்ள மாட்டீர்கள். ஏனெனில் உங்கள் பெயர் பிதாவல்ல, டேவிட். அது போலவே தான் பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமம் என்பது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவே, (அப் 2:38) கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்திலுள்ள ஞானஸ்நானம் தவிர மற்ற எந்த ஞானஸ்நானமும் செல்லுபடியாகாது.

சாட்சி : 4
          இன்றைக்கு அநேகர் பிசாசுகளை விரட்ட இயேசு கிறிஸ்துவின் நாமத்தை பயன்படுத்துகின்றனர். ஏனெனில் இயேசு கிறிஸ்துவின் நாமத்திற்கு மாத்திரமே பிசாசுகள் பயப்படுகின்றன. ஆனால் நீங்கள் பிசாசு பிடித்த ஒரு மனிதனை நோக்கி, ‘பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்தில் வெளியே போ’ என்று கட்டளை கொடுத்துப் பாருங்கள். நீங்கள் தோல்வி அடைவது நிச்சயம். ஏனெனில் அந்த பிசாசு அந்த மனிதனை விட்டு போகவே போகாது. ஏனெனில் பிதா குமாரன் பரிசுத்த ஆவி என்பவை வெறும் பட்டப்பெயர்கள் என்று பிசாசுகள் அறிந்து வைத்திருக்கின்றன. ஆனால் டாக்டர் பட்டம் பெற்று வேதாகமக் கல்லூரியிலிருந்து வந்த ஒருவரால் அதை அறிய முடியவில்லை என்பது ஆச்சரியமாக உள்ளது. எனவே பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்தில் ஞானஸ்நானம் பெறுவது எவ்விதத்திலும் தவறாகும். அதற்கு வேதத்தில் எந்த ஆதாரமும் கிடையாது.

சாட்சி : 5

     இயேசு கிறிஸ்துவின் நாமமே எல்லா நாமத்திற்கும் மேலான நாமம். பிலிப்பியர் 2 : 9-11ம் வசனங்களில் தேவன் இவ்வாறு கூறுகிறார்:

‘ஆதலால் தேவன் எல்லாவற்றிற்கும் மேலாக அவரை உயர்த்தி, இயேசுவின் நாமத்தில் வானோர் பூதலத்தோர் பூமியின் கீழானோருடைய முழுங்கால் யாவும் முடங்கும்படிக்கும்,
பிதாவாகிய தேவனுக்கு மகிமையாக இயேசுகிறிஸ்து கர்த்தரென்று நாவுகள் யாவும் அறிக்கைப்ண்ணும்படிக்கும், எல்லா நாமத்திற்கும் மேலான நாமத்தை அவருக்குத் தந்தருளினார்.’

    எனவே எல்லா நாமத்திற்கும் மேலான நாமம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவே ஆகும். மேலும் கொலோ 3:17-ல், வார்த்தையினாலாவது கிரியையினாலாவது, நாம் எதைச் செய்தாலும், அதையெல்லாம் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலேயே செய்ய வேண்டும் என்று வேதம் கூறுகிறது. எனவே நாம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் மட்டுமே ஞானஸ்நானம் பெற வேண்டும்.

      வேதத்தில் இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலன்றி வேறெந்த வகையிலும் ஞானஸ்நானம் பெற்றிருந்தவர்கள் தாங்கள் பரிசுத்த ஆவியைப் பெற, இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் மறுபடியும் ஞானஸ்நானம் பெறும்படி கட்டளையிடப்பட்டனர். (அப் 19 : 5) எனவே வேதபிரகாரமாக அதுவே சத்தியம். ஆகவே காலதாமதமாகும் முன்னர் நீங்கள் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஞானஸ்நானம் பெற புத்தி செல்லுகிறோம்.

************