Monday, 15 January 2018



வில்லியம் ஹண்டர் இரத்த சாட்சியாக மரித்தல்
~~~~~~~~~~~~

     (‘இரத்த சாட்சிகள்என்ற புத்தகத்திலிருந்து இது எடுக்கப்பட்டுள்ளது. இரத்த சாட்சியான வில்லியம் ஹண்டரின் சாட்சியை ஃபாக்ஸ்-ன் இரத்த சாட்சிகளின் புத்தகம் - FOX'S BOOK OF MARTYRS என்ற புத்தகத்திலும் வாசிக்கலாம்.)

     எட்டாவது ஹென்றி இங்கிலாந்தை அரசாண்ட காலத்தில், 1536ஆம் ஆண்டு, வில்லியம் ஹண்டர் என்ற ஒரு சிறுவன் தோன்றினான். அவனுடைய பெற்றோர் அவனை நல்லொழுக்கத்தில் வளர்த்தது மாத்திரமல்லாமல், வேதத்தை நேசிக்கவும் அதில் சொல்லியிருக்கிற காரியங்களைக் கைக்கொள்ளவும் கற்றுக் கொடுத்தனர்.

     வில்லியம் தன் பள்ளிப்படிப்பை முடித்தபின், தாமஸ் டெயிலர் என்ற பட்டு நெசவாளனிடத்தில் வேலை கற்றுக்கொள்ளும்படி இலண்டன் மாநகரம் சென்றான். அக்காலத்தில் தான் மேரி அரசியாகப் பட்டத்திற்கு வந்தாள். இவளுடைய கட்டளையின்படி மக்கள் அப்பத்தை வணங்கும்படி கத்தோலிக்க சாமியார்களால் வற்புறுத்தப்பட்டனர். அப்பம் பரிசுத்தமாக்கப்பட்டவுடன் கிறிஸ்துவின் மெய்யான சரீரமாக மாறுகிறதென்றும் இவர்கள் போதித்தனர்.

     வில்லியம் ஹண்டரும் அவனைப் போன்று சிந்தையுடைய ஏனையோரும் இத்தகைய போதனைகளை விசுவாசிக்கவில்லை. மேலும், இவ்விதமாக அப்பத்தை வணங்குவது விக்கிரக ஆராதனை செய்வதற்கு ஒப்பாகுமென்றும் உணர்ந்தனர்.

     ஈஸ்டர் ஞாயிறன்று, வில்லியம், கத்தோலிக்கர் ஆசரிக்கும் இராப்போஜனத்திற்குச் செல்ல மறுத்தபொழுது, போனர் என்ற அத்தியட்சரின் முன் கொண்டு வந்து நிறுத்தப்படுவான் என்று பயமுறுத்தப்பட்டான். இப்பயமுறுத்தலைக் குறித்துக் கேள்விப்பட்ட வில்லியத்தின் எஜமான், தன்னுடைய உயிருக்கே ஆபத்து வந்து விடும் என்று பயந்து வில்லியத்தை பிரன்வுட்டிலுள்ள அவனுடைய வீட்டிற்கே திரும்ப அனுப்பி விட்டான்.

     பிரன்வுட்டில் வில்லியம், வீல்ட் சிற்றாலயத்திலுள்ள பெரிய வேதப்புத்தகத்தைப் படித்து தன் நாட்களை மகிழ்ச்சியாகக் கழித்து வந்தான். ஒருநாள் அட்வல் என்ற கொடியன் இவன் வேதம் வாசிப்பதைக் கவனித்து இவனிடம் தர்க்கம் செய்ய ஆரம்பித்தான். உரையாடலில் வில்லியத்தை வெல்ல முடியாமல் கடுங்கோபங் கொண்டவனாய், ‘இதனிமித்தமாக நீ வேகப்போகின்றாய்என்று கத்திக் கொண்டே கத்தோலிக்க சாமியாரை அழைத்து வரச் சென்றான். கத்தோலிக்க சாமியார் அருகிலிருந்த மதுபான சாலையிலிருந்து ஓடி வந்தார். முதலில் வில்லியம் ஒரு மறைவிடத்தில் பதுங்கிக் கொண்டான். ஆனால் பின்னர் அச்சாமியார் தன்னுடைய பெற்றோரைச் சிறையில் அடைப்பதாகப் பயமுறுத்தியதைக் கேள்விப்பட்டு, தன் பெற்றோரைக் காப்பாற்றும் பொருட்டாய் அத்துன்மார்க்கர்களின் கையில் தன்னை ஒப்புக் கொடுத்தான். மறுநாள் பிரௌன் என்னும் தலைவனிடத்தில் அவன் அழைத்துச் செல்லப்பட்டான். இவன் இரட்சகர் பேரில் கொண்டிருந்த நம்பிக்கையையும், அசைக்க முடியாத விசுவாசத்தையும் கண்ட பிரௌன் கடுங்கோபங்கொண்டு இவனிடத்தில் பேசுவதில் பயனில்லை என்று அத்தியட்சர் போனரிடம் அனுப்பினான்.

     வில்லியம் கொண்டிருந்த நம்பிக்கையைத் தகர்க்கவும், அவன் முன்கூறியவைகளை மறுதலிக்கச் செய்யவும் போனர் பிரயாசப்பட்டார். ஆனால் வில்லியமோ, ‘நான் தேவனுடைய உதவியைக் கொண்டு மறுதலிக்க மாட்டேன்என்று பதிலுரைத்தான். ‘நீ வெளியரங்கமாய் அறிக்கையிட வேண்டாம். இரகசியமாய் என்னிடம் அறிக்கையிட்டால் போதும். உன்னை விடுதலை செய்வேன்என்று பலவாறு நயமாகச் சொல்லியும், வில்லியம் விடாப்பிடியாய்நான் மறுதலிக்கவே மாட்டேன். கர்த்தருக்குச் சித்தமானால் நான் ஒருபோதும் என்னுடைய உயிர் இருக்கும்வரையில் மறுதலிக்க மாட்டேன்என்று வெகு திட்டவட்டமாய் கூறி விட்டான்.

     இரண்டு நாட்களாக, வில்லியத்தின் கால்களைத் தொழுமரத்தில் பொருத்தி, அதிக வேதனைப்படும்படி செய்து, மூன்றாம் நாள் அவனை போனருக்கு முன் அழைத்துச் சென்றார்கள். இந்த முறையும் வில்லியம் விடாப்பிடியாய் இருந்தான். கடைசியில், வயது என்வென்று கேட்டபொழுது, ‘பத்தொன்பதுஎன்று பதிலளித்தான். ‘சரி, நீ இருபது வயதாவதற்குள் சாம்பலாகி விடுவாய்என்று பயமுறுத்தியும் அவன் அஞ்சவில்லை.

     அவன் சிறையில் இருந்த காலத்தில், ஒரு நாளுக்கு அரை அணா மதிப்புள்ள ஆகாரத்தையே கொடுக்கும்படி போனர் கட்டளையிட்டார். வீரம் நிறைந்த வில்லியம் ஒன்பது மாதங்களாக சரியான உணவின்றி துன்பப்பட்டும் தன் இரட்சகர் பேரில் கொண்டிருந்த விசுவாசத்தைக் கைவிடவேயில்லை. இறுதியில் அவனைச் சுட்டெரிக்கும்படி அத்தியட்சர் தீர்மானித்தார்.

     வில்லியம் சிறையில் இருக்கும் போது தான் ஒருவிதத்திலும் குறைவில்லாமல் மகிழ்ச்சியாயும் நல்ல உடல் நலத்துடனுமிருப்பதாகத் தன் தாயாருக்கு ஓர் ஆறுதலான கடிதம் எழுதினான்.

     வில்லியம் மரிப்பதற்கு முன் பிரன்ட்வுட்டிலுள்ள சுவான் என்ற சத்திரத்தில் சில நாட்கள் தங்கியிருந்தான். இந்நாட்களில் தன் நண்பர்களில் அநேகரைச் சந்திக்கவும், சத்தியத்தைக் குறித்து சாட்சி கொடுக்கவும் அவனுக்குச் சந்தர்ப்பம் கிடைத்தது.

     இறுதியாக வில்லியத்தை சுட்டெரிக்கும் நாள் வந்தது. புரக்கட் என்னும் ஷெரிப், பந்தத்தைக் கொளுத்தும்படி தீவிரித்துச் சென்றார். இச்சமயத்தில் ஒரு வினோதமான சம்பவம் நேர்ந்தது. ஷெரிப்பின் புதல்வன், வில்லியம் தங்கியிருந்த அறைக்குள் நுழைந்து வில்லியத்தின் கழுத்தைக் கட்டிஅம்புகளையும் பட்டயங்களையும் கொண்டு உன்னை எரிக்களத்துக்கு எடுத்துச் செல்ல ஆத்தமாகும் இக்கொடியவர்களைக் கண்டு பயப்படாதேஎன்று சொல்லிக் கொண்டிருக்கும் பொழுதே துக்கம் அவனின் வாயை அடைத்து விட்டதால் அதற்கு மேல் ஒன்றும் சொல்ல முடியாமல் விம்மி விம்மி அழுதான். வீரம் நிறைந்த வில்லியம்கர்த்தருக்கு ஸ்தோத்திரம்; அவர்களுக்கு நான் பயப்படவில்லைஎன்று தைரியமாய் பதிலுரைத்தான்.

     வில்லியம் இரத்தசாட்சியாக மரிப்பதற்குச் சிறிதும் அஞ்சாமல் முகமலர்ச்சியுடனும் தைரியத்துடனும் ஸ்தம்பத்தை நோக்கிச் சென்றான். வேடிக்கை பார்ப்பதற்கென்று ஆயிரக்கணக்கில் மக்கள் குழுமியிருந்தனர். இக்கூட்டத்தின் மத்தியில் வில்லியம் தன் பெற்றோரைப் பார்த்து, ‘பயப்பட வேண்டாம்; நாம் மறுபடியும் சந்திப்போம். அப்போது நாம் மகிழ்ச்சியோடு வாழ்வோம்என்று ஆறுதல் சொன்னான்.

     வில்லியம் கம்பத்தின் அருகில் சென்றதும் முழங்காற்படியிட்டு 51ம் சங்கீதத்தை முதல் வசனமாகத் தொடங்கி, ‘தேவனுக்கேற்கும் பலிகள் நொறுங்குண்ட ஆவிதான். தேவனே நொறுங்குண்டதும் நருங்குண்டதுமான இருதயத்தை நீர் புறக்கணியீர்என்ற வசனம் வரை சத்தமாக வாசித்தான். இதற்குள்ளாக, ‘நீ கூறியவைகள் எல்லாம் தவறு என்று அறிக்கையிடுவாயானால் இப்பொழுது இரக்கம் பெறுவாய்என்று இராணி எழுதின கடிதத்தை ஷெரிப் வில்லியத்தின் கையில் கொடுத்தார். கடிதத்தைப் படித்த பின்பும் வில்லியம், ‘தேவனுக்கு சித்தமானால், மறுதலிக்க மாட்டேன்என்று கூறிவிட்டான்.

     பின்னர்  வில்லியம் வானத்தை அண்ணாந்து பார்த்துதேவனுடைய குமாரனே, என்மேல் பிரகாசியும்என்று ஜெபித்தான். ஜெபித்த மாத்திரத்தில் கரும் மேகங்களுக்கிடையே இருந்து சூரியன் அதிகப் பிரகாசமாக வில்லியத்தின் முகத்தில் பிரகாசித்தது. இதைக் கண்டு அவனைச் சூழ்ந்திருந்த மக்கள் அனைவரும் வியந்தனர். இதற்குள்ளாக தீ கொளுத்தப்பட்டது. வில்லியம் வானத்திற்கு நேரே தன் கைகளை உயர்த்திகர்த்தாவே, என்னுடைய ஆத்துமாவை ஏற்றுக் கொள்ளும்என்று சொல்லி தன் தலையைக் கொழுந்து விட்டு எரியும் கட்டைகளுக்கிடையே சாய்ந்து தன் ஜீவனை விட்டான்.

~~~~~~~~~~

No comments:

Post a Comment